கவுண்டன்யா ஆற்றில் பாலம் அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து மூதாட்டி பலி
- எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.
- குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே சந்தப்பேட்டை பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலாம்மாள் (வயது 65).
இவர் இன்று காலை பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் அருகில் நடந்து சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.
இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் மூதாட்டியை மீட்க முயன்றனர். முடியாததால் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டியை பிணமாக மீட்டனர்.
இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.