கார் பந்தயப் பாதையில் உள்ள மது விளம்பர பலகைகளை உடனே அகற்ற வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
- மதுவகையின் விளம்பரங்கள் மிக அதிக அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன.
- மதுவை அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் தொடங்கி உள்ள பார்முலா-4 கார் பந்தயப் பாதையான தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் பார்வையில் பளிச்சென்று படும் வகையில் கிங்பிஷர் எனப்படும் மதுவகையின் விளம்பரங்கள் மிக அதிக அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன.
இத்தகைய விளம்பரங்கள் பார்வையாளர்களின் மனதில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்; அந்த வகை மதுவை அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
மது வகைகளுக்கு செய்யப்படும் இந்த மது விளம்பரமும், அதை கார்பந்தயத்தை நடத்தும் அமைப்பும், தமிழக அரசும் அனுமதித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.
கடந்த காலங்களில் மட்டைப் பந்து போட்டிகளின் போது மறைமுகமாக மது மற்றும் புகையிலை விளம்பரங்கள் செய்யப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் சுட்டிக்காட்டி தடுத்திருக்கின்றன. இப்போதும் அதே அக்கறையுடன் தான் மது விளம்பரங்களை சுட்டிக் காட்டுகிறேன். பொது நலன் கருதியும், மக்களைக் காக்கும் கடமையை நிறைவேற்றும் வகையிலும் பார்முலா-4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது விளம்பரங்களை உடனடியாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.