அங்கித் திவாரி வழக்கு: மாவட்ட கோர்ட்டு உத்தரவுகளை அமலாக்கத்துறை சமர்ப்பிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு
- வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மதுரை:
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து, அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்வதற்காக இன்று நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமான மாவட்ட கோர்ட்டு உத்தரவுகளை அமலாக்கதுறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டு, வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.