அண்ணா நினைவு நாள்: தி.மு.க. அமைதி பேரணி - நினைவிடத்தில் மரியாதை
- மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
- தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது.
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அண்ணா சமாதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையொட்டி அண்ணா-எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அண்ணாவின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்துக்குதான் மலர்தூவி அனைவரும் மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி தி.மு.க.வினர் அமைதி பேரணியாக சென்றனர்.
தொடர்ந்து, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே மலர்களால் அலங்கரித்து அமைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஐ.பெரியசாமி, தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., தலைமை கழக செயலாளர் பூச்சி முருகன், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, மயிலை த.வேலு, இளைய அருணா மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.