சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்
- மெட்ரோ ரெயில் பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை ஏன்னு திமுக அரசு குற்றச்சாட்டு
- மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.7,425 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை
சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்டத்திட்டம் என்பது மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில் 50:50 என்ற சமபங்கு நிதி பகிர்வு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
மெட்ரோ ரெயில் முதல் கட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2020 ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசும், இந்த திட்டத்தை மாநில அரசின் திட்டமாக தமிழக அரசு மாற்றி விட்டதால் அதனை முழுக்க, முழுக்க மாநில அரசின் திட்டமாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரெயில் பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று திமுக அரசு தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்தை மத்திய அரசு திட்டமாக அங்கீகரித்து மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "50:50 என்ற சமபங்கு வீதத்தில், மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மெட்ரோ பணிகளுக்கு 50 சதவீத நிதியை ஒதுக்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.