காங்கிரஸ் தலைவரை சந்தித்த அண்ணாமலை: மரியாதை நிமித்தமானது என இரு தரப்பினரும் கருத்து
- திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.
- அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியை பூர்வீகமாக கொண்டவர் மறைந்த துளசி அய்யா வாண்டையார். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் சம்பந்தி.
இந்நிலையில், நேற்று மாலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவையாறில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் மாலையில் தஞ்சையில் தான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.
அவருக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் கிருஷ்ண சாமியும், அண்ணாமலை மட்டும் தனி அறைக்கு சென்று சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீண்ட காலமாக கிருஷ்ணசாமி வாண்டையாரை பார்க்க ஆசை. சென்னையில் சந்தித்தபோது, நான் தஞ்சாவூருக்கு வரும்போது, உங்களது வீட்டுக்கு வந்து காபி அருந்துகிறேன் என கூறினேன். அதன்படி வந்துள்ளேன்.
இவர்களது குடும்பத்தின் மீது எங்களது தலைவர்கள் எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. நான் தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். இந்த சந்திப்பை எல்லாம் அரசியல் வட்டத்துக்குள் போட்டு அடைக்க வேண்டாம். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கிருஷ்ணசாமி வாண்டையார் கூறுகையில்:-
நான் காங்கிரஸ் கட்சியை விட்டு, பா.ஜனதாவில் இணையமாட்டேன். எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் சந்திக்க வந்துள்ளனர். இதில் வேறு ஏதும் உள்நோக்கம் கிடையாது என்றார். இந்த சந்திப்பின்போது பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.