தமிழ்நாடு (Tamil Nadu)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Published On 2024-09-23 01:30 GMT   |   Update On 2024-09-23 01:30 GMT
  • நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
  • இன்று நீலாங்கரை அருகே போலீசார் மீது தாக்குதல் நடத்திய நிலையில் என்கவுண்டர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை போலீசார் தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய முயன்றபோது, போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இரண்டு குண்டுகள் போலீஸ் வாகனத்தில் பட்டது.

இதனால் போலீஸ் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் இரண்டு குண்டுகள் சீசிங் ராஜா மீது பாய்ந்தது. இதனால் சுருண்டு விழுந்த சீசிங் ராஜாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சீசிங் ராஜா உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

அவரது உடல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சீசிங் ராஜா மீது கொலை மற்றும் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29-வது நபராக கைது செய்யப்பட்டவர் சீசிங் ராஜா ஆவார். அண்மையில் சீசிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு, சென்னை போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார். இவர் நியமிக்கப்பட்ட பின் நடைபெறும் 3-வது என் கவுண்டர் இதுவாகும்.

இதற்கு முன்பாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்புவை நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக ரவுடி புதூர் அப்பு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

Tags:    

Similar News