தமிழ்நாடு

மண்டியிட்டு வீடியோ ஆடியோவால் ராணுவ வீரர் சதி திட்டம் அம்பலம்- மனைவியுடன் தலைமறைவு

Published On 2023-06-16 05:46 GMT   |   Update On 2023-06-16 05:46 GMT
  • போலீஸ் அதிகாரிகளும் வழக்கை திசை திருப்பி பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.
  • ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்

கண்ணமங்கலம்:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி கீர்த்தி. இவர் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் எதிரில் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடை மேல்வாடகை எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.

கடை சம்மந்தமாக ராணுவ வீரர் பிரபாகரின் மனைவி கீர்த்தி என்பவருக்கும் ராமுவுக்கும் பிரச்சனை இருந்தாக கூறப்படுகிறது.

இதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார். அதில் நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். கோவில் கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மண்டியிட்டு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவை வலியுறுத்தினார்.

இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.

ராமு தரப்பினரை சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் செல்வராஜ் ஆகிய 2 பேரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இது குறித்து மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் ராணுவ வீரர் பிரபாகரன் படவேட்டில் உள்ள வினோத் என்பவருக்கு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவில் ராணுவ வீரர் கூறியிருப்பதாவது:-

ஜீவா அடி ஆட்களை ஏன் அழைத்து வரவில்லை. நான் இந்த வீடியோவை வெளியிட்டதை 6 கோடி நபர்கள் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை சில முக்கிய அரசியல் கட்சியினருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும். மேலும் யாராவது உங்களிடம் கேட்டால் மிகைப்படுத்தி கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ வெளியானதால் ராணுவ வீரரின் வழக்கு திசை திரும்பியது. அதற்கு ஏற்ப போலீஸ் அதிகாரிகளும் வழக்கை திசை திருப்பி பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.

ராணுவ வீரர் மனைவி கீர்த்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் பிரபாகரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடுக்கம்பாறை வந்ததார். அங்கு மனைவி கீர்த்தியை மாலை 5 மணி அளவில் டிர்சார்ஜ் செய்து அவரது கணவர் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது உடன் பெண் போலீசார் பாதுகாப்புக்காக அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, தங்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்வார்களோ? என பயந்து பிரபாகரன் பைக்கை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.

சதி திட்டம் தீட்டியதாக ராணுவ வீரர் பிரபாகரன், அவரது மனைவி கீர்த்தி மற்றும் செல்போனில் பேசிய அவரது நண்பர் வினோத் ஆகியோர் மீது சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் செல்போனில் பேசி சதி திட்டம் தீட்டிய வினோத் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News