தமிழ்நாடு

சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடி மீது தாக்குதல் - நாதக நிர்வாகிக்கு சிறை

Published On 2024-09-18 16:15 GMT   |   Update On 2024-09-18 16:15 GMT
  • நா.த.க நிர்வாகி அருணகிரி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
  • தாக்கப்பட்ட இளைஞரிடம் இருந்து ₹20,000 பணம் மற்றும் செல்போனை அருணகிரி பறித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் இருவரும் கடந்த 14ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி மதுரையில் தங்கியுளளார். இவர்கள் இருவரையும் பெண்ணின் உறவினர்கள் தேடி வந்த நிலையில், அவர்கள் மதுரையில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அதே ஊரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளரும் வழக்கறிஞருமான அருணகிரி என்பவர் தனது நண்பர்களுடன் மதுரைக்கு சென்றுள்ளார்.

மதுரையில் இருந்த சந்தோஷை காரில் கடத்திய அருணகிரி அவரை கொடூரமாக தாக்கி அவரிடம் இருந்து ரூ.20,000 பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளார். பின்னர் சந்தோஷை வழியிலேயே இறக்கி விட்டு பெண்ணை அவர்களுடன் அழைத்து சென்றுள்ளனர்.

காயமடைந்த சந்தோஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்துள்ள காவல்துறை அருணகிரி, பிரவீன், கார்த்தி ஆகிய 3 பேரை இன்று கைது செய்தது. இவர்கள் மீது மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரையும் செப்டம்பர் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News