தமிழ்நாடு

வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

Published On 2023-10-24 04:16 GMT   |   Update On 2023-10-24 04:16 GMT
  • ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார்.
  • சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுத பூஜை, நவராத்திரி விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் தங்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

கோயில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆற்றுக்குச் சென்று கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

அதைத் தொடர்ந்து சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பாக அமர்ந்தனர்.

அப்போது ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார். பின்னர் கோவில் முன்பாக வரிசையாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் பூசாரி ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார்.

அதனைத்தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமியை வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News