அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் ஏன்? அமைச்சர் விளக்கம்
- தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும்.
- பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி அத்திக்கடவு -அவிநாசி திட்டம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அத்திகடவு-அவிநாசி திட்டம் மிகப்பெரிய திட்டம். இந்த திட்டத்தை முடிக்க அதிகாரிகள் இரவு பகலாக வேலை செய்துள்ளனர். கலெக்டர் வார வாரம் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது இந்த திட்டத்தை வேகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதே நேரத்தில் 6 பம்பிங் நிலையங்களில் முதல் 3 நீரேற்று நிலையங்களுக்கு இடையே உள்ள நிலம் பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை.
இந்த பகுதிகளில் நிலம் கையகப்படுத்த 3 பம்பிங் நிலையங்களுக்கு இடையே உள்ள நிலங்களை கையகப்படுத்த அரசின் சார்பில் நேரடியாக விவசாயிகளிடம் பேசி விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று பேசி நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றோம். திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தி.மு.க. அரசு தான் காரணம்.
விவசாயிகளிடம் நிலத்தை பெற்ற பிறகு தண்ணீர் பற்றாக்குறையால் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. பீடர் லைன் மூலம் 1045 குளங்கள் நிரப்பப்பட வேண்டும். அதை பயன்படுத்தாமல் இருந்ததால் தயார்படுத்த காலதாமதம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் முதலிலேயே நிலத்தை விவசாயிகளிடம் பெற்றிருந்தால் இத்தனை பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.
பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். கூடுதலாக தண்ணீர் வரும் போது திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும். அப்போது திட்டம் தொடங்கி வைக்கப்படும். முதல் கட்டத்திலேயே விவசாயிகளிடம் பேசி நிலம் எடுத்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காது.
1416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளோம். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது 100 விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்திற்கான தொகை வழங்க வேண்டிய உள்ளது. அவர்களிடமும் பேசிவிட்டோம் அந்தப் பணியும் விரைவில் முடிந்துவிடும்.
தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும். தற்பொழுது போதுமான அளவு தண்ணீர் இல்லை. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாது. கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்ட பிறகு உபரி நீரை கொண்டு அத்திகடவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேதி நிர்ணயம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை அத்திக்கடவு அவிநாசி திட்ட விவகாரத்தில் அரசியல் செய்கிறாரா என்ற கேள்விக்கு, பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, இந்த விவாகரத்தில் அவர் அரசியல் செய்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அவர் கூறிய கருத்துக்கள் நியாயமானது தான். அவர் விவரம் தெரியாமல் கூட பேசி இருக்கலாம். திட்டம் தாமதத்திற்கான காரணத்தை கூறிவிட்டோம். இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.