சேர்வராயன் மலைத்தொடரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அத்திப்பழம் "சீசன்" தொடங்கியது
- ஓமலூர், பெரியேரிபட்டி, வேடப்பட்டி, தும்பிபாடி, டேனீஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் சம்பு மற்றும் நாட்டு அத்தி மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
- ஓமலூர் வட்டாரத்தில் ஒரு சில விவசாயிகள் அத்தி மரம் நடவு செய்து, அத்திப்பழத்தை சாகுபடி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தின் எல்லையில் சேர்வராயன் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரில் உள்ள உள்கோம்பை, டேனீஸ் பேட்டை, பண்ணிகரடு ஆகிய பகுதிகளில் அத்திப்பழ மரங்கள் உள்ளது.
மேலும், ஓமலூர், பெரியேரிபட்டி, வேடப்பட்டி, தும்பிபாடி, டேனீஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் சம்பு மற்றும் நாட்டு அத்தி மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மரங்களில் தற்போது தித்திக்கும் அத்திப்பழங்கள் கொத்துகொத்தாக காய்த்து பழுத்து தொங்குகிறது. அத்தி மரம் ஆண்டுக்கு 3 முறை காய் பிடிக்கிறது.
பழங்கள், பலா பலத்தை போன்று மரத்தின் கிளைப்பகுதியில் இருந்து உச்சி வரை காய்கள் காய்த்து அழகாக காட்சி அளிக்கிறது. இந்த பழம் ரத்தம் அழுத்தம், சர்க்கரை, இருதயம் தொடர்பான பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது.
மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது. அதனால், அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்த பழம் வணிக ரீதியாக லாபம் தரும் என்பதால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அத்தி மரங்களை நடவு செய்து பராமரித்து லாபம் பெறலாம் என்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
ஓமலூர் வட்டாரத்தில் ஒரு சில விவசாயிகள் அத்தி மரம் நடவு செய்து, அத்திப்பழத்தை சாகுபடி செய்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், அத்திக்காய்களை கொண்டு சாம்பார், பொரியல் செய்வதற்காகவும் விற்பனை செய்யப்படுகிறது. அத்திப்பழம் மற்றும் காய்கள் ரகத்தை பொருத்து கிலோ 200 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் மலைப்பகுதியில் மரங்களில் பழுத்துள்ள அத்திப்பழங்கள், பறவைகள் சாப்பிட்டது போக மீதி அனைத்தும் வீணாகி வருகிறது.