பாபர் மசூதி இடிப்பு தினம்- முக்கிய ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
- சென்னையில் இருந்து திருச்சி வரை ரெயில் நிலையங்களில் 4,300 போலீசார் குவிப்பு.
- நாளை வரை முக்கிய ரெயில் நிலையங்களுக்கான பாதுகாப்பு தொடரும்.
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று முதல் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியன் தலைமையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இணைந்து சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் எழும்பூர் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை மோப்ப நாய்ப்படை உதவியுடன் போலீசார் சோதனை செய்கின்றனர். இதைத் தொடர்ந்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.
சென்னையில் இருந்து திருச்சி வரை உள்ள ரெயில் நிலையங்களில் 1,300 ரெயில்வே போலீசார், 3,000 ரெயில்வே பாதுகாப்பு போலீசார் என 4 ஆயிரத்து 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை செய்து வருகின்றனர். கடந்த 3-ந்தேதி தொடங்கிய இந்த பாதுகாப்பு பணியானது நாளை (புதன்கிழமை) வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.