தமிழ்நாடு

கோவை மேயர் கல்பனா ராஜினாமா?

Published On 2024-07-02 07:44 GMT   |   Update On 2024-07-02 07:45 GMT
  • கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார்.
  • மேயர் பங்கேற்கவிருந்த சில நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கோவை:

தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

இந்தநிலையில் மேயர் கல்பனா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதற்காக கல்பனா தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கோவை அரசியல் கட்சியினர் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் இதுவே பேச்சாக உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியில் இன்று நடைபெற இருந்த குறைதீர்க்கும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அதேபோல் இன்றும் வழக்கம் போல் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் திடீரென குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதேபோல மேயர் பங்கேற்கவிருந்த சில நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குறைதீர்க்கும் கூட்டம் ரத்தானது கோவையில் மேலும் பரபரப்பை அதிகரித்து உள்ளது.


இதுதொடர்பாக மேயர் கல்பனாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது கணவர் ஆனந்தகுமார் பேசினார். அவர் கூறுகையில் மேயருக்கு தற்போது உடல் நலம் சரியில்லை. இதனால் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றார்.

இதுதொடர்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது மேயர் ராஜினாமா செய்வார் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான் என கூறி தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி தேர்தல் நடந்தபோது பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, மாநகராட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்பட்டார். இதனால் தி.மு.க. அபார வெற்றி பெற்றது.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஏற்கனவே கவுன்சிலர்களாக இருந்தவர்கள் என பலர் தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மேயராக அறிவிக்கப்பட்டவர் தான் கல்பனா.

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து அவர் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார். அதன்பிறகு சில பிரச்சனைகள் அவரை தொடர்ந்தது. மேயரின் தாயார் வசித்த வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணுடன் தகராறு ஏற்பட்டு அந்த பெண் போலீஸ்நிலையம் வரை சென்றார். போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மேயர் மீதே அவர் புகார் கொடுத்தார். அப்போது இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின் சந்தையில் வசூல் செய்வது தொடர்பான பிரச்சனையில் மேயரின் கணவர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலும் மேயருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஆனால் மேயர் கல்பனா வார்டில் தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுகள் குறைவாகவே கிடைத்திருந்தது.

அந்த வார்டில் அண்ணாமலை 330 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். மிக முக்கிய பொறுப்பில் உள்ள மேயரின் வார்டில் வாக்குகள் குறைந்தது தி.மு.க. மேலிடத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இதுதொடர்பாக கட்சி மட்டத்தில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் தான் மேயர் கல்பனா ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரவியுள்ளது.

இந்தநிலையில் கல்பனாவிடம் இருந்து மேயர் பதவி பறிக்கப்படும் பட்சத்தில் அந்த பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் பலர் கோதாவில் குதித்துள்ளனர். மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். பலர் சென்னைக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

Tags:    

Similar News