தமிழ்நாடு

பதநீரில் கலப்படம் செய்வதை தடுக்க வேண்டும்: பனைமர தொழிலை காக்க அரசுக்கு கோரிக்கை

Published On 2024-04-27 10:10 GMT   |   Update On 2024-04-27 10:10 GMT
  • கருப்பட்டி சாப்பிட்டவர்கள் அதிக நாட்கள் பலம் உள்ளவர்களாக காணப்படுவார்கள்.
  • அழிந்து வரும் பனை மரம் ஏறும் தொழிலை பாதுகாக்க அரசு பனைமரம் ஏறும் இயந்திரங்களை வழங்க வேண்டும்.

பொன்னேரி:

பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் ஆகும். பனை மரத்தை ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைப்பதுண்டு.

நிலத்தடி நீர்மட்டத்தை குறையாமல் பாதுகாக்கவும் பனை மரம் உதவுகிறது. இது வளர்ச்சி அடைய 15 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை ஆகும். பனைமரம் முழுமையும் பயனுள்ளதாகும். காலப்போக்கில் பனைமரங்கள் குறைந்து தென் மாவட்டங்களில் மழை இல்லாமல் காய்ந்து பட்டு போய் காணப்படுகின்றன.

செங்கல் சூளை மற்றும் எரிப்பதற்கு பனை மரம் வெட்டப்பட்டு அழிந்து வருவதை கண்டறித்து தமிழக அரசு பனை மரத்தினை பாதுகாக்க நலவாரியம் மற்றும் கூட்டுறவு துறை அமைத்து, தமிழகம் முழுவதும் பனை விதைகள் விதைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் படுக்கபத்து கிராமத்தை சேர்ந்தவர் அகிலன். இவர் தாத்தா காலத்தில் இருந்தே பனைத்தொழில் செய்து வந்த நிலையில் அப்பகுதியில் மழை இல்லாததால் நிறைய பனை மரங்கள் பட்டுப்போன நிலையில் தொழில் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பழைய எருமை வெட்டி பாளையத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 480-க்கும் மேற்பட்ட பனை மரங்களுடன் இருந்த பனைமர தோப்பினை வாங்கி இழந்துபோன பனை மர தொழிலை மீண்டும் தொடங்கி உள்ளனர்.

அரசு அனுமதியுடன் பனை மரத்தில் பதநீர் இறக்கும் தொழிலை செய்ய முடிவெடுத்த நிலையில் ராஜபாளையத்தில் இருந்து பனையேறும் தொழிலாளர்கள் 4 பேரை வரவழைத்து ஒரு நபருக்கு 25 பனைமரம் வீதம் 4 பேர் மூன்று வேளை பனை மரத்தில் ஏறி தினமும் காலை 80 லிட்டர் முதல் 100 லிட்டர் வரை பதநீர் இறக்கி விற்பனை செய்கின்றனர்.

மீதமுள்ள பதநீரை காய்ச்சி கருப்பட்டி ஆக்கி விற்பனையும் செங்குன்றம், பொன்னேரி, தாம்பரம், சோழவரம், அம்பத்தூர், கொளத்தூர், மணலி, மீஞ்சூர் உள்ளிட்ட பல பகுதியில் பதநீர் வாங்க ஒரு நாளைக்கு முன்பாக ஆர்டர் கொடுத்து தினமும் பதநீர் வாங்கி செல்கின்றனர்.

சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அதிகமான பேர் குடும்பமாக வாகனங்களில் வந்து நுங்குடன் சேர்த்து பதநீர் அருந்தி செல்கின்றனர்.

இதுகுறித்து அகிலன் கூறியதாவது, பனைமரம் மிகச் சிறந்த மரமாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக பயன் தரக்கூடியது எனது தாத்தா காலத்தில் இருந்தே பனை தொழில் செய்து வருகிறேன்.

காலப்போக்கில் பனையேறுவதற்கு ஆட்கள் இல்லாததால் குறைவாக காணப்பட்டதால் பனைமர தொழிலை பாதுகாக்கவும் இளம் தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லவும் ஊக்குவிக்கவும், கடந்த 2011 ல் தோட்டத்தினை வாங்கி ஆடு, மாடு, கோழி மற்றும் தோட்டம் அமைத்து கிராம சூழ்நிலை போல் காணப்படும் தோட்டத்தில் ஊரில் இருந்து 4 தொழிலாளர்களை வரவழைத்து பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகிறேன்.

பதநீர் பற்றி தெரியாதவர்களுக்கு குடிக்க இலவசமாக கொடுத்து அதனுடைய பயன்களை விளக்கி சொல்லி வருகிறேன். கடந்த 2 வருடமாக அரசு அனுமதியுடன் தொழில் நடத்தி வருகிறேன்.

பனை மரத்தில் உள்ள அத்தனை பொருட்களும் பயன்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் மே, ஜூன் மாதம் வரை பதநீர் கிடைக்கும். இதில் கால்சியம், இரும்பு சத்து அதிகம் காணப்படுவதாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். பதநீர் சாப்பிட்டவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படும். உடலை குளிர்ச்சி படுத்தக்கூடியது. ரத்த சோகையை போக்கும் எனவும் பேன் தொல்லை இருப்பவர்கள் தலையில் பதநீர் ஊற்றி குளித்தால் முழுவதும் நீங்கி விடுவதாகவும் வயிறு எரிச்சல் அல்சர் நீங்குவதாகவும் நுங்கு சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு தணியும் உடல் குளிர்ச்சி தரும். அதிகமான சத்துக்கள் நிறைந்தது சுகர் இருப்பவர்கள் நுங்கு தோவினை சேர்த்து சாப்பிடும்போது சுகர் குறைகிறது.

கோடை காலத்தில் உடலில் வேர்க்குரு இருப்பவர்கள் தேய்த்து குளித்தால் வேர்க்குரு நீங்குகிறது. கருப்பட்டி சாப்பிட்டவர்கள் அதிக நாட்கள் பலம் உள்ளவர்களாக காணப்படுவார்கள். சுகர் இருப்பவர்கள் சாப்பிட்டால் சுகர் குறையும் வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட்டால் இரண்டே நாளில் குணமாகும் நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து கால்சியம் பொட்டாசியம் ஜிங்க் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கோடை வெயிலில் தாக்கும் அதிகமான நோயான அம்மை நோய் வருவதை எளிதில் தடுக்கக் கூடியது சாலை ஓரங்களில் பதநீர், நுங்கு விற்பனை அதிகமாக உள்ளன. இவை ஒரிஜினல் பதநீர் தானா என சரி பார்த்து குடிக்க வேண்டும்.

கருப்பட்டி போலியான கருப்பட்டி சாலை ஓரங்களில் விற்கப்படுவதாயிலும் போலிகளை கண்டறிந்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாப்பிடும் பொருளில் சாலை ஓரங்களில் கலப்படம் செய்து விற்பனை செய்வதால் வயிற்றுப்போக்கு அதிக சுகர் ஒவ்வாமை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகள் கடற்கரை ஓரங்களில் நடுவதற்கு கொடுத்தேன்.

இதுகுறித்து பனைமரம் ஏறும் தொழிலாளிகள் பன்னீர், சண்முகம் கூறியதாவது:-

அழிந்து வரும் பனை மரம் ஏறும் தொழிலை பாதுகாக்க அரசு பனைமரம் ஏறும் இயந்திரங்களை வழங்க வேண்டும். தொழில் செய்ய தொழிலாளர்களுக்கு லோன் வசதி மற்றும் பென்ஷன் வழங்க வேண்டும். பனங்கருப்பட்டியை ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும். கலப்படம் செய்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் கும்பல் வந்து விட்டதால் கருப்பட்டியை பரிசோதனை செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News