தமிழ்நாடு

ராமேசுவரத்தில் 5-வது நாளாக சூறை காற்று: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

Published On 2024-07-20 04:30 GMT   |   Update On 2024-07-20 04:30 GMT
  • 4 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் ரூ.5 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
  • மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாத காரணத்தால் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடலில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறை காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 9-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

மேலும் ஆழ்கடலில் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். கடலோர பகுதியில் சூறை காற்று வீசுவதால் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு உள்ள படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

4 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் ரூ.5 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர். வானிலை மையம் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாத காரணத்தால் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தொடர்ந்து 4 நாட்களாக மீன்பிடிக்க செல்ல முடியாததால் மீனவர்களின் இயல்பான பணி முடங்கியது. புயல் சின்னம் நீங்கி கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதற்கு எப்போது அறிவிப்பு வெளியாகும்? என ராமேசுவரம் பகுதி மீனவர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர். 

Tags:    

Similar News