விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு 'சீல்': பாரதிய ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம்
- விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்தோடு தமிழக அரசு செயல்படுவதாக அவர்கள் புகார் கூறினர்.
- மறியலுக்கு முயன்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
நெல்லை:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் சதுர்த்தி விழாவையொட்டி ரசாயன கலப்பு கொண்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க ஐகோர்ட்டும், பசுமை தீர்ப்பாயமும் தடை விதித்துள்ளது.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு கூடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பாளை சீவலப்பேரி ரோடு கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் செய்து வரும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான விநாயகர் சிலைகள் ரசாயன கலப்பு இருப்பதாக கூறி, அங்கு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து தகரம் வைத்து அந்த கூடத்தை அடைத்து அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதற்கு நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். வழிபடுவதற்காக செய்யப்பட்ட சிலைகளை விற்பனைக்கு வழங்காமல் தடுத்து, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்தோடு தமிழக அரசு செயல்படுவதாக அவர்கள் புகார் கூறினர்.
மேலும் தயாரித்து வைத்துள்ள சிலைகளை விற்பனைக்கு வழங்க கோரி நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்டத் தலைவர் தயா சங்கர் தலைமையில் இன்று வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளுடன் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், முத்து பலவேசம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நாகராஜன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி அங்கு பாளை உதவி கமிஷனர் பிரதீப் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொடர்ந்து பா.ஜ.க.வினர் சாலை மறியலுக்கு முயற்சி செய்தனர். அப்போது அவர்களிடம் உதவி கமிஷனர் மற்றும் பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியலுக்கு அனுமதி கிடையாது, மீறி மறியலுக்கு முயன்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் மாவட்ட தலைவர் தயாசங்கர் கூறுகையில், இந்த ஆண்டு 180 சிலைகள் தயாரிக்கப்பட்டு கிருபா நகர் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளுக்கு நாங்கள் முன்பணமும் கொடுத்துவிட்டோம். எனவே இந்த ஆண்டு மட்டும் அந்த சிலைகளை எங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி கரைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு மட்டுமாவது அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அவர்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகளிடம் பேசி இறுதி முடிவை அறிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இறுதி முடிவு தெரியும்வரை இங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என்று கூறி பாரதிய ஜனதா கட்சியினர் அங்கேயே அமர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.