நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது
- ஊசிவாய்தாரா என்ற வகை பறவை சைபிரியா நாட்டை சேர்ந்தது.
- நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது.
நெல்லை:
தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2022-2023-ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்களுக்கு பறவைகள் கணக்கெடுப்பானது நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தாழையூத்து அருகே ராஜவல்லிபுரம் குளத்தில் அதிகாலையில் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.
இதனை மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை நீர்வளம் அமைப்பு, மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம், தூத்துக்குடி முத்துநகர் இயற்கை சங்கம் ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
தாமிரபரணி, அதன் துணை ஆறுகள் மற்றும் பாசன குளங்கள் உள்ளிட்டவை நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை தென் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், வாழை உற்பத்தி மையமாகவும் செழிப்புற செய்கின்றன.
இப்பாசன குளங்கள் எண்ணற்ற நீர்வாழ் பறவைகளுக்கு குறிப்பாக குளிர் காலங்களில் வலசை வரும் பறவைகளுக்கு புகலிடமாக உள்ளன. இக்குளங்களில் இதுவரைக்கும் 100-க்கும் அதிகமான பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், நயினார் குளம், கங்கைகொண்டான், சூரங்குடி ஆகிய குளங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் திருப்பணி செட்டிக்குளம், மூப்பன்பட்டி கண்மாய் ஆகிய நீர்நிலைகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளம், ராஜகோபாலப்பேரி குளங்கள் பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு வாய்ப்பளிப்பதை கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பெரியகுளத்தில் பறவைகள் ஆராய்ச்சியாளர் மரிய அந்தோணி தலைமையில், கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர், தன்னார்வலர்கள் 15 பேர் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை திருக்குறுங்குடி வனசரகர் யோகேஸ்வரன் தொடங்கி வைத்தார்.
திருக்குறுங்குடி பெரியகுளம், ஊச்சிகுளம், செங்களாகுறிச்சி குளம், கொடுமுடியாறு அணை, பச்சையாறு அணை பகுதிகளுக்கு சென்று அங்கு வாழும் பறவைகள் குறித்து கணக்கெடுத்தனர். இதில் களக்காடு, பகுதியில் கூலகிடா, முக்குளிப்பான், மீசை ஆலா, சிறு கொக்கு, நெட்டை கொக்கு, குளத்து கொக்கு, அரிவாள் மூக்கன், வர்ண நாரை, சின்ன அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், சங்கு வளை நாரை, ஊசிவாய்தாரா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வகையிலான பறவைகள் வாழ்வது கண்டறியப்பட்டது.
இதில் ஊசிவாய்தாரா என்ற வகை பறவை சைபிரியா நாட்டை சேர்ந்தது ஆகும். இதுபோல நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திலும் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது.