தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை சரிபார்ப்பு
- பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பார்க்கப்படுவது வழக்கம்.
- வனத்துறையின் எடை மையத்தில் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.
இந்த முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு பராமரிக்கப்பட்டு வந்த மூர்த்தி என்ற வளர்ப்பு யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தது.
தற்போது யானைகள் முகாமில், 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பார்க்கப்படுவது வழக்கம்.
அதன்படி முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை கணக்கெடுப்பு நேற்று நடந்தது.
இதற்காக முதுமலையில் இருந்து கூடலூர் தொரப்பள்ளிக்கு வளர்ப்பு யானைகள் அழைத்து வரப்பட்டது.
பின்னர் வனத்துறையின் எடை மையத்தில் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.
தெப்பக்காடு வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர் சங்கர், முதுமலை, சுஜய், சேரன், ரகு, மசினி, கிரி, செந்தில் வடிவு உள்பட 15 வளர்ப்பு யானைகளுக்கும் உடல் எடை சரிபார்க்கப்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,
கோடை காலத்தை விட தற்போது வளர்ப்பு யானைகளின் உடல் எடை சராசரியாக 130 கிலோ வரை அதிகரித்துள்ளது. மஸ்து உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கவில்லை என தெரிவித்தனர்.