தமிழ்நாடு

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-08-24 05:39 GMT   |   Update On 2024-08-24 05:39 GMT
  • பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
  • கழிப்பறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

வடவள்ளி:

கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2500-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளி முதல்வரின் இ மெயிலுக்கு ஒரு குறுந்தகவல் வந்திருந்தது.

அதில் கோவையில் உள்ள உங்கள் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து கோவையில் உள்ள பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோவை பள்ளியின் முதன்மை மேலாளர் ஜீவரத்தினம் என்பவர் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தனியார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன.

உடனடியாக போலீசார் மாணவர்களை வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி விட்டு சோதனை மேற்கொண்டனர். பள்ளியில் உள்ள கழிப்பறைகளிலும் சோதனை செய்தனர்.

ஆனால் அங்கு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்தே வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்தது.

இதன் பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பள்ளியின் முதன்மை மேலாளர் ஜீவரத்தினம் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இ-மெயில் வந்த முகவரியை வைத்து, அந்த நபர் யார்? என கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News