தென்திருப்பேரை பகுதியில் துண்டான கிராம சாலைகள்- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.
- அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.
ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.
தென்திருப்பேரை சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது, குட்டக்கரை, மேலக்கடம்பா, மற்றும் கடம்பாவின் கடைமடை ஊரான கல்லாம் பாறை போன்ற கிராமங்கள் மற்றும் கடயனோடை, கேம்பலாபாத் பகுதிகளுக்கு தொடர்ந்து 3 முதல் 4 நாட்களாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இப்பகுதியில் ஏராளமான கால்நடை கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இறந்தது. மேலும் சாலைகள் அடித்து செல்லப்பட்டது.
ராஜபதி, குருகாட்டூர், சிவசுப்பிரமணியபுரம், குட்டி தோட்டம், மணத்தி, கார விளை, சோழியக்குறிச்சி, சேதுக்குவாய்தான், சொக்கப் பழக்கரை போன்ற கிராமங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.
இக்கிராம சாலைகள் அனைத்தும் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதே போல ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டல், ஆவரங்காடு, மாங்கொட்டாபுரம், வரதராஜபுரம், கட்டையம் புதூர், சிவராம மங்கலம், மங்க ளக்குறிச்சி, பெருங்குளம் ஏழு ஊர் கிராமம், ஏரல், ஆறுமுகமங்கலம், சம்படி, புள்ளா வெளி போன்ற ஊர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.