சேலம் அருகே அரசு பஸ் டிரைவர் கொலை- உறவினர்கள் 5 பேர் கைது
- குழந்தைவேல் புதிதாக வீடு கட்ட உள்ளார்.
- சின்னசாமி தரப்பினர், குழந்தைவேலுவுடன் தகராறில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மல்லுார் அருகே பாரப்பட்டி தொட்டியங்காட்டை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 55). இவர் அரசு பஸ் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (62).
குழந்தைவேல் மற்றும் சின்னசாமியின் தந்தைகள் அண்ணன் தம்பிகள். இவர்களுக்கு தலா 1.50 ஏக்கர் நிலம் உள்ளது. இதனால், குழந்தைவேல், சின்னசாமி இடையே வழித்தட பிரச்சனையால் முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் குழந்தைவேல் புதிதாக வீடு கட்ட உள்ளார். இதற்காக ஏற்கனவே இருந்த மின் வழித்தடத்தை மாற்றி அமைக்க, நேற்று மாலை மின் கம்பத்துக்கு குழி தோண்டினார். அப்போது அங்கு வந்த சின்னசாமி தரப்பினர், குழந்தைவேலுவுடன் தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு முற்றியதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, ஆத்திரம் அடைந்த சின்னசாமியின் தம்பி ராஜா, மண்வெட்டியால் குழந்தைவேலுவின் தலையில் வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் குழந்தைவேல் சரிந்து விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தைவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பாரப்பட்டி தொட்டியங்காடு பகுதியை சேர்ந்த குழந்தைவேல் உறவினர்களான ராஜா (48), சின்னசாமி (62), கணேசன் (36), தினேஷ் (28), சுரேஷ் (31) ஆகியோரை 5 பேரை கைது செய்தனர்.
வழித்தடப் பிரச்சினையில் அரசு பஸ் டிரைவர் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.