மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மீது டிரோன் பறக்க விட்ட 2 பெண் என்ஜினீயர்கள் மீது வழக்கு
- மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது.
- 4 கோபுர நுழைவு வாயில்களிலும் மத்திய பிரிவு பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். கலை நயமிக்க கோபுரத்தையும், சிற்ப வேலைபாடுகளையும் காண வெளிநாட்டினரும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. இதன் காரணமாக 4 கோபுர நுழைவு வாயில்களிலும் மத்திய பிரிவு பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரத்தை படம் பிடிக்க டிரோன் கேமரா இயக்கப்பட்டது. மேலே சுற்றி வந்த அந்த டிரோன் திடீரென கோபுரத்தின் மீது மோதி கீழே விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் டிரோனை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது சித்திரை வீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்த பெங்களூரில் பணி புரியும் 2 பெண் என்ஜினீயர்கள் கோபுரத்தை படம் பிடிக்க டிரோனை பறக்க விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 2 பெண்களிடமும் தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த சயலிசிங்கர், சுருதி உர்குடே என தெரியவந்தது. இவர்கள் யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலை தளத்தில் பதிவிடுவதற்காக டிரோனை பறக்க விட்டு கோபுரங்களை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் அனுமதியின்றி டிரோனை பறக்க விட்டதாக 2 பெண் என்ஜினீயர்கள் மீது, மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.