நகர்மயமாக்கலால் விவசாயம் அழிந்து வருகிறது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
- மழை நீரானது அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது.
- விவசாய நாட்டில், விவசாயத்தை அழிக்க கூடாது.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1974-ம் ஆண்டு வரை 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பசுமையான காடுகளாக இருந்தன. இவை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குளங்களுக்கு நீராதாரமாக விளங்கியதோடு, விவசாயத்திற்கும் உறுதுணையாக இருந்தது. ஆனால் 1974-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வணிக நோக்கில் யூகலிப்டஸ், முந்திரி போன்ற மரங்கள் தமிழக வனத்தோட்ட கழகத்தால் நடப்பட்டன.
இந்த மரங்களை வளர்ப்பதற்காக வனப்பகுதியில் உள்ள காடுகளை அழித்து, யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதற்காக, நாற்புறங்களிலும் அகழிகளையும், பெரிய மண் தடுப்புகளையும் அமைத்து வருகின்றனர். இதனால் மழை நீரானது அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கிராமங்களில் உள்ள கண்மாய் குளம் நிறையாமல் விவசாயம் தடைபடுகிறது.
இதனால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதோடு, புதுக்கோட்டை மாவட்டத்தின் பாரம்பரிய நீர் மேலாண்மை அமைப்பு சிதையும் நிலையில் உள்ளது. தொடர்ந்து வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டு வருகிறது.
ஆகவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை நட இடைக்காலத் தடை விதிப்பதோடு, நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நகர் மயமாக்கலால் நாள்தோறும் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாய நாட்டில், விவசாயத்தை அழிக்க கூடாது. விவசாய சாகுபடி நிலங்கள் குறைந்து வருகிறது. கர்நாடகாவில் கனமழை பெய்தால் தான் காவிரி ஆற்றில் தண்ணீர் வருகிறது.
நாளுக்கு நாள் விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நாம் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கும். தற்போது துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்கிறோம்.
காகித ஆலை வேண்டுமா, உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வன பரப்பில், யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் வளர்ப்பதால், இதற்காக ஆங்காங்கே ஏற்படுத்தும் தடுப்புகளால், சமவெளி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு மழை நீர் வருவது தடுக்கப்படுகிறதா? என 6 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.