தமிழ்நாடு

கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலி- சாராய வியாபாரிகளிடம் 2வது நாளாக விசாரணை

Published On 2023-05-25 05:38 GMT   |   Update On 2023-05-25 05:38 GMT
  • சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
  • 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

இது தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் மெத்தனால் கொடுத்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலைகடத்தி வந்த வேலுர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 3 நாட்கள் அவகாசம் வழங்க கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கைது செய்யப்பட்ட 11 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாார்.

இதனை தொடர்ந்து 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு 11 பேரையும் தனித்தனி அறையில்அடைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.

விஷச்சாராயம் கடத்தலுக்கு பின்னணியில் யார் உள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த காவல் துறையினர், வருவாய்துறையினர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News