9 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண்ணை தேடும் சி.பி.சி.ஐ.டி போலீஸ்
- கணவன், மனைவி இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இவர்கள் கோர்ட்டில் விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
- கோவிலில் தேடி கொண்டிருந்தபோது, அங்கு தாரணியின் கைப்பை செல்போன், செருப்புகள் கிடந்தது.
கோவை:
கோவை கருமத்தம்பட் டியை சேர்ந்தவர் தாரணி (29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் ஆனது. சுரேஷ்குமார் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார்.
இதையடுத்து திருமணம் ஆனதும், தனது மனைவியை அழைத்துக்கொண்டு சுரேஷ்குமார் அமெரிக்கா சென்றார். அங்கு 2 பேரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் தாரணிக்கு உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கணவன், மனைவி இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இவர்கள் கோர்ட்டில் விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாரணி அமெரிக்காவில் இருந்து தனது சொந்த ஊரான கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கு வந்தார்.
இங்கு தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இங்கிருந்தபடியே தனது உடல்நலன் பாதிப்புக்கு சித்தாபுதூரில் உள்ள சித்தா மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த பின்னர் தனது வீட்டில் வந்து தங்கி இருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தனது பெற்றோரிடம் சென்னியாண்டவர் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். கோவிலுக்கு சென்றும் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
கோவிலில் தேடி கொண்டிருந்தபோது, அங்கு தாரணியின் கைப்பை செல்போன், செருப்புகள் கிடந்தது. அதனை அவர்கள் எடுத்தனர். இதுகுறித்து தாரணியின் தாய் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் போலீசார் அந்த வழக்கை கைவிட்டு விட்ட னர்.
இந்த நிலையில், தாரணியின் தாய் சாந்தாமணி, தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரியும், இந்த வழக்கினை கோவை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மாயமான பெண் வழக்கினை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண்ணை தேடும் பணியை சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடங்கினர்.
கோவை சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சிவக்குமார் மேற்பார்வையில் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் இளம்பெண்ணின் கணவர், கோவில் பூசாரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்றைய தினம் பதிவாகி இருந்த காட்சிகளை கேட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் காணாமல் போன பெண்களின் விவரங்களை கேட்டும் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.