தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' நீராதார திட்ட பணிகள் குறித்து மத்திய குழுவினர் திடீர் ஆய்வு

Published On 2022-10-20 06:21 GMT   |   Update On 2022-10-20 06:21 GMT
  • சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டியின்போது குளங்களை சீரமைத்து அழகுபடுத்த சிறப்பு மேம்பாட்டு நிதியாக 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • "ஜல்ஜீவன்" திட்ட, நீராதார நீர்நிலை மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்விற்கு டெல்லியில் இருந்து வந்த மத்திய குழுவினர் இரண்டு குளங்களை ஆய்வு செய்தனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டியின்போது குளங்களை சீரமைத்து அழகுபடுத்த சிறப்பு மேம்பாட்டு நிதியாக 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோலைப்பொய்கை குளம் மற்றும் திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள வண்ணான்குட்டை என இரண்டு குளங்கள் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் "ஜல்ஜீவன்" திட்ட, நீராதார நீர்நிலை மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்விற்கு டெல்லியில் இருந்து வந்த மத்திய கலாச்சார இயக்குனர் பைத்தே, மத்திய கிடங்கு கழக உதவி இயக்குனர் விக்ரம் கார்க் ஆகியோர் மாமல்லபுரத்தில் சீரமைக்கப்பட்ட இரண்டு குளங்களையும் நேற்று மாலை ஆய்வு செய்தனர். குளங்களின் நீர் கொள்ளளவு, வழித்தடம், பயன்பாடு, வெளியேற்றம், கட்டுமான பணிகளின் உறுதி, இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் உள்ளிட்டவைகளை குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, பொறியாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மணமை, கடம்பாடி, திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குளங்கள் மேம்பாட்டு பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News