தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக்கல்வி திட்ட நிதி நிறுத்திவைக்கப்பட்டது ஏன்? மத்திய அரசு விளக்கம்

Published On 2024-10-09 02:11 GMT   |   Update On 2024-10-09 02:11 GMT
  • முதல்கட்ட நிதியான ரூ.573 கோடியை கடந்த ஜூன் மாதத்தில் மத்திய அரசு கொடுத்திருக்க வேண்டும்.
  • இதுவரை முதல் கட்ட நிதியை வழங்கவில்லை.

சென்னை:

பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சில குறிப்பிட்ட நிதிகளை மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் என்ற பெயரிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் வாயிலாக வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் 4 கட்டங்களாக இந்த நிதி ஒதுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அதாவது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் இந்த நிதி செலவிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் முன்மொழியப்படும் மொத்த நிதியில், மத்திய அரசு சார்பில் 60 சதவீதமும், மாநில அரசு சார்பில் 40 சதவீதமும் ஒதுக்கப்படும்.

அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் (2024-25) மத்திய அரசு ரூ.2,152 கோடியை தன் பங்கு நிதியாக வழங்க முன்மொழிந்து இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் முதல்கட்ட நிதியான ரூ.573 கோடியை கடந்த ஜூன் மாதத்தில் மத்திய அரசு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை முதல் கட்ட நிதியை வழங்கவில்லை.

இதற்கு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு இணைய ஒப்புக்கொள்ளாததால், அந்த நிதி நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழி கல்வி கொள்கை இருப்பதால் அதனை ஏற்க மாநில அரசு மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) வாயிலாக கிடைத்த தகவலில், தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதி எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

அதில், "2024-25-ம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்ஷா அபியான் நிதியை வழங்க சில நிர்வாக அனுமதி பெற வேண்டியிருக்கிறது எனவும், அந்த நிர்வாக செயல்முறைகள் முடிந்ததும் எப்போது நிதி ஒதுக்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படும்'' எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதவிர, கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் இருந்து 2023-24-ம் கல்வியாண்டு வரையிலான 4 ஆண்டு காலங்களில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக முன்மொழியப்பட்ட மத்திய அரசின் பங்கான ரூ.7 ஆயிரத்து 508 கோடியே 27 லட்சத்தில், ரூ.7 ஆயிரத்து 199 கோடியே 55 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்பட்டு இருக்கிறது.



கடந்த 4 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

ஆண்டு

முன்மொழியப்பட்ட நிதி

ஒதுக்கப்பட்ட நிதி

2020-21

ரூ.1,649.96 கோடி

ரூ.1,621.54 கோடி

2021-22

ரூ.1,649.96 கோடி

ரூ,1,598.82 கோடி

2022-23

ரூ.2,117.59 கோடி

ரூ.2,107.23 கோடி

2023-24

ரூ.2,090.76 கோடி

ரூ.1,871.96 கோடி


Tags:    

Similar News