தூங்க விடாத கனவுகளை துரத்தினால் நிச்சயம் உயர்ந்த இடத்தை அடையலாம்- கமலஹாசன் பேச்சு
- அப்துல் கலாம் நாட்டின் மிகப்பெரிய பொறுப்பினை எட்டுவதற்கு விதையாக அமைந்தது இந்த பள்ளி தான்.
- தொலைதூர கிராமத்தில் இருப்பதாக நினைத்து சோர்வடைய வேண்டாம்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா அவர் படித்த தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு கலந்து கொண்டு புதிய கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் காணொலியில் பேசியதாவது:-
அப்துல் கலாம் நாட்டின் மிகப்பெரிய பொறுப்பினை எட்டுவதற்கு விதையாக அமைந்தது இந்த பள்ளி தான். தனியார் அமைப்பு ஏற்படுத்தி கொடுக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். அப்துல் கலாம் கூறியது போல தூங்க விடாத கனவுகளை துரத்தி கொண்டே இருந்தால் நாளை பெரிய தலைவராகவோ, விளையாட்டு நட்சத்திரமாகவோ, நாட்டை ஆளும் பொறுப்பிற்கோ வர முடியும். அதற்கு அடித்தளம் அமைப்பது கல்வி தான்.
இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்பு எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்குரிய முயற்சிகளை தொடருங்கள். தொலைதூர கிராமத்தில் இருப்பதாக நினைத்து சோர்வடைய வேண்டாம். கல்வி நிச்சயம் உங்களை உயர்த்தும். நம்மால் முடியும் என நம்புங்கள். முன்னேறுவீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.