தமிழ்நாடு

கழிவுநீர் தேக்கமாக மாறும் செங்கல்பட்டு கொளவாய் ஏரி

Published On 2023-08-05 06:59 GMT   |   Update On 2023-08-05 06:59 GMT
  • செங்கல்பட்டு நகரின் அருகே அமைந்துள்ள கொளவாய் ஏரியானது கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாசடைந்து வருகிறது.
  • மழைக்காலங்களில் கொளவாய் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது நீஞ்சல் மதகு வழியாக பாலாற்றில் சென்று கலக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மிகப்பெரிய ஏரிகள் மற்றும் குளங்கள் நிறைந்த மாவட்டமாகும். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகே மதுராந்தகம் ஏரி உள்ளது. இதற்கடுத்ததாக செங்கல்பட்டில் உள்ள பெரிய ஏரி கொளவாய் ஏரி. இது 882 ஏக்கர் பரப்பளவுடன் 15 அடி ஆழம் கொண்ட ஏரியாகும்.

ஏரியின் கொள்ளளவு 476 கன அடியாகும். கொளவாய் ஏரியை சுற்றி அமனம்பாக்கம் ஏரி, குன்னவாக்கம் ஏரி, அஞ்சூர் ஏரி, வீராபுரம் ஏரி, மேலமையூர் ஏரி, வல்லம் ஏரி, பட்டரவாக்கம் ஏரி, அனுமந்தை ஏரி, குண்டூர் ஏரி உள்பட பெரிய ஏரி மற்றும் சிற்றேரி என 23 ஏரிகள் அமைந்துள்ளன. மழைக்காலங்களில் 23 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிய பிறகு வெளியேறும் உபரி நீரானது கொளவாய் ஏரியை சென்றடைகிறது.

கொளவாய் ஏரி முழு கொள்ளளவை எட்டிய பிறகு உபரி நீரானது நீஞ்சல் மதகு வழியாக பொன்விளைந்த களத்தூர் ஏரி மற்றும் பாலாறு பகுதியில் சென்று கலக்கிறது. செங்கல்பட்டு நகரின் அருகே அமைந்துள்ள கொளவாய் ஏரியானது கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாசடைந்து வருகிறது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி, நகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவ மனைகள், கல்லூரி மற்றும் பள்ளிகள் ரெயில்வே குடியிருப்பு, திரையரங்குகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த செங்கல்பட்டு நகரத்தில் அனைத்து கழிவுநீர் மற்றும் மழைநீர் கொளவாய் ஏரியில் சென்று கலந்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொளவாய் ஏரியை கரைகளை பலப்படுத்தி ஏரியை தூர்வாரி படகு குழாம், கரையில் இருந்து ஏரியின் நடுவே நடந்து சென்று வர பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம், உணவு விடுதி உயர் கோபுர கடிகாரம் மற்றும் பூங்காக்கள் அமைப்பதற்கு ரூபாய் 60 கோடி நிதி நீர்வளத்துறை சார்பில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு பணிகள் ஆமைவேகத்தில் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொளவாய் ஏரியில் சென்று கலக்கின்ற கழிவுநீரை தடுத்து நிறுத்த வேண்டும். கொளவாய் ஏரி அதை ஒட்டி உள்ள அகழி குளம் ஆகியவை குப்பைகள் மற்றும் கோழி இறைச்சி, ஆடு மற்றும் மாடுகள் கழிவுகளை கொட்டும் இடமாக கடந்த 20 ஆண்டுகளாக காணப்பட்டு வருகிறது என்று அப்பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபடுகின்ற பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மழைக்காலங்களில் கொளவாய் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது நீஞ்சல் மதகு வழியாக பாலாற்றில் சென்று கலக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 சதவீதம் மக்கள் குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை உள்ளடக்கிய ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்க பெருமாள் கோவில் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 சதவீதம் மக்கள் குடிநீர் விநியோகம் பாலாற்றின் மூலமாகவே அப்பகுதி மக்களுக்கு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

சுற்றுலா துறை சார்பில் படகு குழாம் அமைப்பதற்கு ரூபாய் ஒன்றரை கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுற்றுலா துறை பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

மாசடைந்த கொளவாய் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாலாற்றில் சென்று கலக்காதவாறு நீர் வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News