தமிழ்நாடு

விமானப்படை சாகச நிகழ்ச்சி.. கூடுதல் பேருந்துகளை இயக்கும் மாநகர போக்குவரத்துக் கழகம்

Published On 2024-10-04 15:13 GMT   |   Update On 2024-10-04 15:13 GMT
  • கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பொது மக்கள் வசதிக்காக 75 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட இருக்கிறது.

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு வருகிற 06 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று, சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை காண வரும் பொதுமக்கள் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 8:00 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு 120 பேருந்துகள் இயக்கப்படும். எனினும், வருகிற ஞாயிற்றுக் கிழமை விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஒட்டி, பொது மக்கள் வசதிக்காக 75 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட இருக்கிறது.

இதேபோன்று அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் இயக்கப்பட உள்ளது. அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுதவிர, டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம். தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News