தமிழ்நாடு

மழை வெள்ளத்தை சமாளிக்க சென்னை மாநகராட்சி தயார்- மேயர் பிரியா

Published On 2024-08-13 09:15 GMT   |   Update On 2024-08-13 09:30 GMT
  • கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு வார்டுக்கும் தலா 10 பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருந்தோம்.
  • சென்னையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்யும்.

சென்னை:

வரப்போகிறது பருவமழை. கடந்த காலங்களை போல சென்னை மழை வெள்ளத்தில் மிதக்குமா? தப்பிக்குமா? என்ற கேள்வி சென்னைவாசிகள் அனைவரிடமும் உள்ளன.

இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி மேயர் பிரியா ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 ஆண்டுகளில் மாநகராட்சி சார்பில் வெள்ளக்கசடு தணிப்பு, பல இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை செய்தோம்.

இந்த ஆண்டு கவுன்சிலர்கள் குறுகிய தெருக்களிலும் வடிகால் கட்டுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். 3 அடிக்கு 3 அடி என்ற அளவில் வடிகால் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை சாலைகளில் ஆய்வு செய்து வருகிறோம்.

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு வார்டுக்கும் தலா 10 பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருந்தோம். இந்த ஆண்டும் 200 வார்டுகளுக்கும் பணியாளர்களை நியமித்து விட்டோம். அவர்கள் கடந்த மாதம் முதல் வடிகால்களை தூர்வாரும் பணியிலும், சேறுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

நகரில் 33 கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களில் நீர்மட்டம் உயரும்போது ஓடை நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும். இதை தவிர்க்க அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளது. இவை தண்ணீரை நன்றாக வெளியேற்ற உதவும். நீர் வளத்துறையும் சகதிகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

சென்னையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்யும். டிசம்பரில் அதிக மழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதமே மழை பெய்ய தொடங்கிவிட்டது.

தினமும் இரவில் மழை பெய்து வருகிறது. காலநிலை மாற்றம் கடுமையானது. முன்கூட்டியே மழை தொடங்கி இருப்பதால் நவம்பர், டிசம்பரில் அதிக மழைப் பொழிவு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். எதையும் சமாளிக்க மாநகராட்சி தயாராகி வருகிறது.

தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அந்த பகுதிகளில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் நாள் முழுவதும் பஸ் ரூட் சாலைகள் மாற்று வழிகள், கால்வாய்கள் சுரங்கப்பாதைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சுரங்கப்பாதைகளில் நீர் மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டினால் சென்சார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை செய்யும். உடனே அந்த பகுதி அதிகாரிகளை ஒருங்கிணைத்து பிரச்சனைகளை தீர்க்க இது உதவும். கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் 45 செ.மீ. மழை பெய்தது. இந்த ஆண்டும் அதிக மழை பெய்தால் சமாளிக்கும் வகையில் சென்னை முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பல பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கிறது. அவர்களுடன் ஒருங்கிணைந்து மோட்டார்கள் ஏற்பாடு செய்வது, வடிகால்கள் சரியாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு வெள்ளத்தால் மகாபலிபுரம் சாலையில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த ஆண்டு தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News