வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டாயம்- சென்னை மாநகராட்சி
- நாய்களின் உரிமையாளருக்கு இன்று காலை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- நாய்களுக்கு, அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும்.
சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயையும் நாய்கள் கடித்தது.
நாய்கள் கடித்ததால் தலையில் படுகாயங்களுடன் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நாய்களை பூங்காவுக்குள் அழைத்து வந்த உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் சிகிச்சை செலவை ஏற்பதாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கூறினார்.
படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை ஆயிரம் விளக்கில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைதான நிலையில், அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில், ராட்வீலர் வகையும் ஒன்றாகும். ராட்வீலர் வகை நாய்களை இனப்பெருக்கம் செய்யக்கூடாது என்ற தடையும் உள்ளது.
3 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் நிலைய ஜாமினில் விடுவிக்க உள்ள பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாய்களின் உரிமையாளருக்கு இன்று காலை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியை பொருத்தவரை எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசென்ஸ் பெற வேண்டும். நாய்களுக்கு, அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக கால்நடைத் துறையுடன் சேர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.