தமிழ்நாடு

ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

Published On 2024-07-19 11:44 GMT   |   Update On 2024-07-19 16:38 GMT
  • அமலாக்கத்துறை கடந்த ஜூன் 26-ந்தேதி ஜாபர் சாதிக்கை கைது செய்தது.
  • சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே 3 நாட்கள் அனுமதி அளித்திருந்தது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தியது. அப்போது 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி அனுமதி அளித்தார்.

3 நாள் அனுமதி இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் இன்று ஜாபர் சாதிக் மீண்டும் நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை சார்பில், ஜாபர் சாதிக்கிடம் முழுமையாக விசாரணை முடியவில்லை. இதனால் விசாரணை நடத்த மேலும் 12 நாள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது.

இதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அத்துடன் ஜூலை 23-ந்தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் ஜூன் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

டில்லி திஹார் சிறையில் இருந்து, சிறை மாற்ற வாரண்ட் மூலம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்-கை நீதிமன்ற காவலில் வைக்கவும், 14 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியும் அமலாக்க துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 29-ம்தேதி வரை, ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, 15 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணை முடிவில் 3 நாள் அனுமதி அளித்த நிலையில் தற்போது மேலும் 4 நாட்கள் அனுமதி அளித்துள்ளது.

Tags:    

Similar News