தமிழ்நாடு

நெல்லை: சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-07-02 10:06 GMT   |   Update On 2024-07-02 10:06 GMT
  • நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சாதிமறுப்பு திருமணம் நடைபெற்றது.
  • ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலத்தை சூறையாடினர்.

கடந்த மாதம் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண், தங்களுக்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில் மனுதாரரின் முகவரிக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த முகவரியில் அவர்கள் இல்லாததால் சம்மன் அவர்களை சென்றடையவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இதனையடுத்து, திருமணம் செய்து கொண்ட இருவரும் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தாங்கள் வசிக்கும் இடம் குறித்த விவரங்களையும், மிரட்டல் விடுக்கும் நபர்களின் விவரங்களையும் காவல் நிலையத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தம்பதிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்

Tags:    

Similar News