சென்னை மெட்ரோ ரெயில்: பூந்தமல்லி பணிமனைக்கு ரூ.31.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து
- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி முன்னிலையில் ஒப்பந்தம்
- கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழி சாலை வரை 27 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டு வரும் பணிமனைக்கு ரூ.31 கோடியே 80 இலட்சம் மதிப்பில் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஸ்வஸ்திக்-எக்விப்லவாக்கி நிறுவனத்திற்கு ரூ.31.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) முன்னிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி) மற்றும் ஸ்வஸ்திக்-எக்விப்லவாக்கி நிறுவனத்தின் திட்ட தலைவர் ஷோபித் சக்சேனா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
'வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், நிறுவுதல், சோதனை செய்தல், பூந்தமல்லி பணிமனையில் இயந்திரங்கள் மற்றும் ஆலைகளை இயக்குதல் மற்றும் ஆயத்த தயாரிப்பு அடிப்படையில் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்".
இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள 13 இயந்திரங்கள் மற்றும் இதர தளவாடங்கள் ஜூலை 2024 இல் பூந்தமல்லி பணிமனையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு தளத்தில் சோதனை செய்யப்படும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம்-4 கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழி சாலை வரை 26.1 கி.மீ. நீளமுள்ள உயர்மட்ட மற்றும் சுரங்கப்பதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் என மொத்தம் 27 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் பூந்தமல்லியில் ஒரு பணிமனை என இந்த வழித்தடத்தில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு, துணை பொது மேலாளர் ஜெகதீஸ் பிரசாத், ஸ்வஸ்திக்-எக்விப்லவாக்கி நிறுவனத்தின் துணை குழு தலைவர் பிரசாந்த் நர்டேகர், பொது ஆலோசகரின் ரோலிங் ஸ்டாக் தலைவர் நந்தகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.