தமிழ்நாடு (Tamil Nadu)

தேனியில் நடைபயணம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

Published On 2024-04-10 02:50 GMT   |   Update On 2024-04-10 04:04 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை.
  • அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர், தேனி பெரியகுளத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், தேனி உழவர் சந்தை, பாரஸ்ட் ரோட்டில் நடைபயணம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வாக்கு சேகரித்தார்.

இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியகுளம் சாலையில் உள்ள என்.ஆர்.டி. ரோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.

பின்னர் உழவர் சந்தைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சாலையோர வியாபாரிகள் கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்தனர். அவர்களிடம் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடமும் மகளிர் உரிமைத் தொகை முறையாக கிடைக்கிறதா? என்று விசாரித்தார்.

அதற்கு பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும், இதனால் தங்கள் குடும்ப செலவுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.

அதன் பின் சாலையோரம் இருந்த ஒரு தேனீர் கடையில் அமர்ந்து எளிமையான முறையில் தேனீர் குடித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த எளிமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. முதல்-அமைச்சருடன் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

Tags:    

Similar News