தமிழ்நாடு

கிரைம் தொடர்களை பார்த்து பீதியில் உறையும் குழந்தைகள்- "குற்றங்களை செய்ய தொடங்குகிறார்கள்"

Published On 2024-05-11 10:20 GMT   |   Update On 2024-05-11 10:20 GMT
  • சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேசன், அரசு பள்ளிகளை சேர்ந்த 2033 மாணவ, மாணவிகளில் கிரைம் தொடர் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களை ஆய்வு செய்து உள்ளார்கள்.
  • யூடியூபில் குழந்தைகள் பார்க்கும் சில நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் மற்றும் குற்ற ஆவணபடங்கள் குற்றவாளிகளை பெருமைப்படுத்துகின்றன.

ஓ.டி.டி. தளத்தில் வெளிவரும் கிரைம் தொடர்களுக்கு குழந்தைகளும், இளம் தலைமுறையினரும் அடிமையாகி வருகிறார்கள். சென்னையை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஒ.டி.டி. தளத்தில் துப்பறியும் தொடர் ஒன்றை பார்க்க தொடங்கி இருக்கிறார். அதில் தடயங்களை கண்டுபிடித்து அதை பின் தொடர்ந்து குற்றவாளியை பின் தொடர்ந்து பிடிப்பதற்காக தீட்டும் திட்டங்கள், அப்போது ஏற்படும் திகில் நிறைந்த திருப்பங்கள் பார்வையாளர்களை ஈர்த்து விடுகிறது. நாளை என்ன நடக்கும்? என்ற ஆர்வத்துடன் தவறாமல் பார்க்கிறார்கள்.

அந்த காட்சிகளை பார்த்த மாணவிக்கு மனதில் ஒருவிதமான பயம் சூழ்ந்துள்ளது. தூக்கத்தில் கனவுகள் வந்து பயமுறுத்தி இருக்கிறது. இதனால் சில தெருக்களுக்கு செல்வதையும் பொது இடங்களுக்கு செல்வதையும் கூட அந்த மாணவி தவிர்த்துள்ளார். அந்த அளவுக்கு பயம் அவரை துரத்தி இருக்கிறது.

கிரைம் தொடர்கள் பிஞ்சு மனங்களில் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேசன், அரசு பள்ளிகளை சேர்ந்த 2033 மாணவ, மாணவிகளில் கிரைம் தொடர் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களை ஆய்வு செய்து உள்ளார்கள்.


10 ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 945 பேர், கல்லூரி மாணவர்கள் 1,013 பேர், ஆராய்ச்சி மாணவர்கள் 75 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் 34 சதவீதம் பேர் மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருந்தனர். தினமும் 2 மணிநேரம் கிரைம் தொடர்களை பார்த்து வந்த குழந்தைகள் 4 பேரில் ஒருவர் குற்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் இந்த மாதிரி தொடர்களை பார்ப்பதை பெற்றோர்களால் கட்டுப்படுத்தவும் முடிவதில்லை. இதனால் சீரழிக்கும் படங்களையும் அவர்கள் பார்க்கிறார்கள்.

மேலும் யூடியூபில் குழந்தைகள் பார்க்கும் சில நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் மற்றும் குற்ற ஆவணபடங்கள் குற்றவாளிகளை பெருமைப்படுத்துகின்றன.

அவ்வாறு குற்றவாளிகளையும் ஹீரோக்களாக சித்தரிக்கும் நிகழ்ச்சிகள் இளம் பார்வையாளர்களை ஈர்ப்பதாக உள்ளன. ஓ.டி.டி. சேனலுக்கு தொடர் எழுதும் ஆர்வமுள்ள கே.அருண் கூறியதாவது:-

"உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எந்த தணிக்கையும் இல்லாமல யூடியூப் சேனல்களுக்கு ஸ்கிரிப்டுகளை தேர்வு செய்கிறோம். டி.ஆர்.பி.யை அதிகரிப்பதற்காக ஓ.டி.டி. இயங்கு தளங்கள் சில நேரங்களில் கிராபிக்சுகளை சேர்க்கும்படி படைப்பாளிகளை ஊக்குவிப்பதாக கூறினார்.

குற்றங்களை செய்யத் தூண்டும் சித்தரிப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் குழந்தைகள் முன் எழுந்து உள்ள இந்த சவால்களை சந்திக்கும் வகையில் நிழலையும், நிஜத்தையும் அவர்களுக்கு வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்கிறார்கள்.

Tags:    

Similar News