தமிழ்நாடு

சீனாவில் பரவும் நிமோனியா காய்ச்சல்: தமிழக அரசு ஆலோசனை

Published On 2023-11-27 08:16 GMT   |   Update On 2023-11-27 10:06 GMT
  • நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.
  • ஆலோசனையில் ஆக்சிஜன் கையிருப்பு, முக கவசம், அவசரகால மருந்துகள் கையிருப்பு வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

சென்னை:

சீனாவின் வடக்கு பகுதியில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.

உலக சுகாதார அமைப்பு (World Health Organization), இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில்,

புதிய நோய் தொற்று கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் புதிய நோய்க்கான அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ள சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினர் முன்னரே அறிந்துள்ள நோய் கிருமிகளால் ஏற்படும் வழக்கமான நிமோனியா தாக்குதல்தான். மேலும், மருத்துவமனைகளின் கொள்ளளவிற்கு உட்பட்ட அளவில்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

 இந்நிலையில் சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், தொற்றுநோய் தடுப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில், தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் கையிருப்பு, முக கவசம், அவசரகால மருந்துகள் கையிருப்பு வைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நிமோனியா நோய் தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News