தமிழ்நாடு

சித்திரை திருவிழா: கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க முன்பதிவு தொடக்கம்

Published On 2024-04-07 05:37 GMT   |   Update On 2024-04-07 05:37 GMT
  • கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர்.
  • தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை:

மதுரை சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் 23-ந்தேதி சித்திரா பவுர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தர உள்ளனர். நடப்பாண்டில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் விரைவாக நடத்தி வருகிறது.

இந்த சூழலில் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர், பானகம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்பேரில் இனிவரும் ஆண்டுகளில் உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்ற பிறகே நீர், மோர் பந்தல், அன்னதானம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் வழங்க வேண்டும்.

அதேபோல் கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர். இந்த நேர்த்திக்கடனின்போது தோல் பையில் நிரப்பிய தண்ணீரை துருத்தியின் மூலமாக பீய்ச்சி அடிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிலர் தோல் பையில் சிறிய மோட்டார் பொருத்தி அதிவேகத்தோடு நீரை பீய்ச்சி அடிப்பதுடன் வாகனத்தில் வரும் அழகர், அழகருடன் பயணிக்கும் பட்டர்கள், பெண்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று (7-ந்தேதி) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதே சமயம் உயரழுத்த மோட்டார் பம்பு, மின் மோட்டார்கள் ஆகியவற்றின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளழகர் அழகர் கோவில் மலையில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு வரும் வரை இடையில் உள்ள எந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது என ஐகோர்டு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News