உலக முதலீட்டாளர்கள் மாநாடு: பியூஷ் கோயலுக்கு நினைவு பரிசு வழங்கிய முதலமைச்சர்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
- மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சென்னை:
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப்ப யணம் செய்து புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.
தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதற்கிடையே, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தக தொழில்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார்.
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.