அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் ஜெயகுமார் மறைவுக்கு முதலமைச்சர் அஞ்சலி
- அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அவரது உழைப்பையும் வளர்ச்சியையும் அருகிலிருந்து கவனித்து வந்தேன்.
- கலங்கி நிற்கும் உங்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் என்.ஜெயகுமார் காலமானார். நந்தனம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயகுமார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் என்.ஜெயகுமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தலைமைக் கழகத்தின் தூணாக விளங்கிய நம் அன்புக்குரிய ஜெயக்குமார் அவர்கள் மறைந்த செய்தி வந்தடைந்து என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது.
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அவரது உழைப்பையும் வளர்ச்சியையும் அருகிலிருந்து கவனித்து வந்தேன். தலைமைக் கழகம் அறிவகத்தில் செயல்பட்டு வந்த காலத்திலேயே தலைமைக் கழகப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கினார். அறிவகத்தில் தொடங்கிய பயணம் அரசினர் தோட்ட சட்டமன்ற அலுவலகம், அன்பகம் எனத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் என உச்சம் பெற்றது. தலைமைக் கழகத்தை நாடி வந்த ஒவ்வொரு உடன்பிறப்பும் அன்போடும் உரிமையோடும் உறவாடி 'அறிவாலயம்' ஜெயக்குமார் எனப் பெயரிட்டனர்.
அண்ணா அறிவாலயத்தின் மேலாளரான பத்மநாபனும் ஜெயக்குமாரும் இரட்டைத் தூண்களெனத் தலைமைக் கழகப் பணிகளைத் தாங்கி வந்தனர். தலைமைக் கழகத்தால் எடுக்கப்படும் முடிவுகளைப் பிழைதிருத்தம் செய்து அவற்றை வெளியிட்டதில் அவர்கள் இருவரது பங்கும் அளப்பரியது. அதில் ஒரு தூண் இன்று சரிந்துவிட்டது என்பது கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. பாசத்துடன் பழகிய ஜெயக்குமார் அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தேன்; அவரது குழந்தைகளுக்குப் பெயரிட்டேன்; அவரது குடும்பத்தினரின் திருமணங்களை நடத்தி வைத்தேன்; அவரது குடும்பத்தில் ஒருவனாய் இருந்தேன். உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப உடன்பிறப்பாய் துணை நின்ற அறிவாலயம் ஜெயக்குமார் அவர்களை வழியனுப்பும் துயர நிலைக்கு இன்று ஆளாகிவிட்ட கொடுமையும் வந்து சேர்ந்துவிட்டது. கலங்கி நிற்கும் உங்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
அறிவாலயம் ஜெயக்குமார் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.