மதுரை ஜெயில் நூலகத்துக்கு 300 புத்தகங்கள் வழங்கிய முதியவர்- நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாக முதலமைச்சர் பாராட்டு
- மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் நேரடியாக கூடல் புதூருக்கு சென்று பெரியவர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து 300 புத்தகங்களையும் பெற்று வந்தனர்.
- சிறைச்சாலை தனிமையை போக்க நல்ல நண்பன் புத்தகங்கள் தான்.
மதுரை:
மதுரை மத்திய ஜெயிலில் பொதுமக்கள் பங்களிப்புடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சம் புத்தகங்களை இருப்பில் வைப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மதுரை சிறைத்துறை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன் மற்றும் ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக எண்ணற்ற பொதுமக்கள், மத்திய ஜெயிலுக்கு நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை கூடல் புதூர், ரயிலார் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், மத்திய ஜெயிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், "நான் மதுரை மத்திய ஜெயில் நூலகத்துக்கு 300 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க விரும்புகிறேன். எனக்கு 92 வயது ஆகிறது. எனவே புத்தகங்களுடன் நேரடியாக ஜெயிலுக்கு வர இயலவில்லை. ஜெயில் அதிகாரிகள் நேரில் வந்து புத்தகத்தை வாங்கி சென்றால், பெரு மகிழ்ச்சி அடைவேன்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் நேரடியாக கூடல் புதூருக்கு சென்று பெரியவர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து 300 புத்தகங்களையும் பெற்று வந்தனர்.
முதியவரின் இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவரிடம் "உங்களை நெகிழ வைத்த மனிதர்கள் யார்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:-
சிறைச்சாலைகளில் கைதிகள் படிக்கும் வகையில் நூலகம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக சிறைத்துறைக்கு பலரும் புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த 92 வயதான பெரியவர் பாலகிருஷ்ணன் என்பவர், தனது சேகரிப்பில் இருந்து 300 புத்தகங்களை சிறைத்துறைக்கு வழங்கி உள்ளார்.
வாழ்நாள் எல்லாம் சேகரித்து வைத்து இருந்த புத்தகத்தில் ஒரு பகுதியை, சிறை கைதிகளின் நலனுக்காக வழங்கிய அவரின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. உண்மையிலேயே இந்த செய்தியை படித்து நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இதை பலரும் பின்பற்ற வேண்டும்.
நான் மிசா காலத்தில் அரசியல் கைதியாக ஜெயிலில் இருந்தேன். அப்போது எனக்கு அங்கு உள்ள நூலகத்தில் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசியல், வரலாற்றைத் தாண்டி நிறைய நாவல்களை படித்து அறிந்தேன். சிறைச்சாலை தனிமையை போக்க நல்ல நண்பன் புத்தகங்கள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வரின் பாராட்டு குறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், மதுரை மத்திய சிறைக்கு 300 புத்தகங்கள் வழங்கியதை கேள்விப்பட்டு, தமிழக முதல்வர் என் பெயரை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். அது எனக்கு மிகவும் பெருமை தருகிறது. இன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதால் அவருக்கு நன்றி சொல்லவும், பாராட்டவும் கடமைப்பட்டு இருக்கிறேன் என்றார்.