கோவையில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
- கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கும் தினந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- பயணிகள் கூட்டம் காரணமாக முன்பதிவில்லா பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.
கோவை:
கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், நீலகிரி எக்ஸ்பிரஸ், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் உள்பட 8 ரெயில்கள், வாரந்தோறும் 11 ரெயில்கள் என 20 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கும் தினந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் கேரளாவில் இருந்து கோவை வந்து சென்னைக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதுமே கூட்டம் அலைமோதும்.
கோடை விடுமுறையையொட்டி சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் தங்கள் விடுமுறையை கழிப்பதற்காக கோவையில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளுக்கு வந்திருந்தனர்.
தற்போது கோடைவிடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு வந்தவர்கள், சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக கோவையில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதுவும் குறிப்பாக ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
கோவையில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் பயணிகள் குடும்பம், குடும்பமாக பயணிக்கின்றனர்.
சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற 10-க்கும் மேற்பட்ட ரெயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் முன்பதிவு டிக்கெட் பெறுவதற்கு 20 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் டிக்கெட் கிடைக்கும்.
அதன்படி சிலர், முன்பதிவு செய்து ரெயிலில் பயணம் செய்கின்றனர். டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்கின்றனர்.
முன்பதிவில்லா பெட்டிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக உள்ளது. ரெயிலில் உள்ள இருக்கைகள் முழுவதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கோவையில் இருந்து நேற்று இரவு நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதுவும் முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் போட்டி போட்டு கொண்டு இருக்கையை பிடிக்க ஓடினர். பயணிகள் கூட்டம் காரணமாக முன்பதிவில்லா பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.
ரெயிலில் உள்ள கீழ் இருக்கைகள் நிரம்பியதால் பலர் மேலே உள்ள இருக்கைகளிலும், நடந்து செல்லும் பாதைகளிலும் அமர்ந்து கொண்டனர். இன்னும் பலர் நின்று கொண்டும் பயணித்ததை பார்க்க முடிந்தது. ஒரு இடத்தில் ஒரு மற்றொரு இடத்திற்கு நகர முடியாத படி அனைத்து இடங்களிலும் பயணிகள் அமர்ந்து கொண்டு பயணம் செய்தனர். நிற்க கூட இடம் இல்லாமல் பயணிகள் தவித்தனர்.
இதற்கிடையே கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்து விட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காத்திருப்பு பட்டியலில் 150க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். மேலும் தட்கல் டிக்கெட் திறந்த ஒரு சில மணி நேரங்களில் முடிந்து விட்டது.
இதையடுத்து குழந்தைகளுடன் பலர் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் பயணம் செய்தனர். இன்றும், நாளையும் இன்னும் அதிகளவிலான பயணிகள் ரெயில் மூலம் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால பலர் 10-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
சொந்த ஊர் செல்ல பலர் இருப்பதால் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் அல்லது முன்பதிவு இல்லாத ரெயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.