புளியம்பட்டி அருகே கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி
- இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
- இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 20) மற்றும் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சரவண குமார் (18) ஆகிய இருவரும் சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மனோஜ் மற்றும் சரவண குமார் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் வேட சின்னனூர் என்ற இடத்தில் இருவரும் எல்.பி.பி கால்வாயில் இறங்கி குளிக்க சென்றனர்.
அப்போது மனோஜ் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். அதைப் பார்த்த அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக நீரில் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.
அதில் சரவணகுமார் என்பவரை காப்பாற்றி விட்டனர். மேலும் மனோஜ் என்பவர் நீரின் ஆழமான பகுதியில் மூழ்கி விட்டதால் மனோஜ் நீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தனி பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த மனோஜின் பிரேதத்தை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரபி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.