தமிழ்நாடு

உற்சாக நடனமாடி சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடிய மாணவ-மாணவிகள்

Published On 2023-01-06 08:00 GMT   |   Update On 2023-01-06 08:00 GMT
  • சமத்துவ பொங்கலை கொண்டாடும் வகையில் மாணவிகள் பாரம்பரிய சேலையிலும், மாணவர்கள் வேட்டி அணிந்தும் வந்திருந்தனர்.
  • தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், எந்த பண்டிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு உண்டு. இந்த பண்டிகை ஜாதி, மாதங்களை கடந்து தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், உழைப்பை போற்றும் பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அங்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடுவார்கள்.

இதில் இளைஞர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்வார்கள்.

வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகிறார்கள்.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரி 60 ஆண்டுகளை கடந்து பழமை கொண்டதாகும். இங்கு ஆண்டுதோறும் தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப்பொங்கல் மற்றும் சித்தர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

இதில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

இதனை கல்லூரி முதல்வர் சாந்தமரியாள் தொடங்கி வைத்தார். கடந்த 2 நாட்களாக பாரம்பரிய போட்டிகளான பல்லாங்குழி உள்ளிட்ட போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கேரம்போர்டு, இறகுபந்து போட்டி, கைப்பந்து போட்டி, கைகளில் மெகந்தி வரைதல், மாறு வேடப்போட்டி, ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவிகளுக்கு காகித அலங்கார போட்டிகள் நடந்தது.

இதில் ஒரு குழுவில் 3 பேர் வீதம் 12 குழுக்கள் இடம் பெற்றது. இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகள் காகிதங்களை கொண்டு விதவிதமான ஆடைகளை வடிவமைத்து அணிந்து வந்து போட்டியில் பங்கேற்றனர்.

மேலும் காய்கனிகளில் கலைநயம் மிக்க பொருட்களை தயாரித்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது.

இறுதி நாளான இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்காக கல்லூரி முழுவதும் தோரணங்கள் கட்டி வண்ண கோலமிட்டு சிறப்பான வகையில் அலங்காரம் செய்யப்பட்டது. சமத்துவ பொங்கலை கொண்டாடும் வகையில் மாணவிகள் பாரம்பரிய சேலையிலும், மாணவர்கள் வேட்டி அணிந்தும் வந்திருந்தனர்.

கல்லூரி பேராசிரியர்கள் பட்டு வேட்டி, பட்டு சேலைகள் அணிந்தபடி விழாவில் பங்கேற்றனர். இதையொட்டி மண்பானையில் மாணவிகள் பொங்கலிட்டனர்.

அப்போது கூடியிருந்த சக மாணவிகள் பொங்கலோ பொங்கல் என்று தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி சமத்துவ பொங்கலை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

பின்னர் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசைக்கப்பட்டது. அப்போது அதன் தாளத்திற்கு ஏற்ப மாணவ-மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர். இதனால் கல்லூரி வளாகமே இன்று விழா கோலம் பூண்டுள்ளது.

Tags:    

Similar News