கூலி தொழிலாளிக்கு ரூ.26 ஆயிரம் மின் கட்டணம்- காஞ்சிபுரம் கலெக்டரிடம் புகார்
- ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
- மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வையாவூர் கிராமத்தில் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் பழனி. விவசாய கூலி தொழிலாளியான இவர் தனது தாய், மனைவி, 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.
ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
எங்கள் வீட்டில் குறைந்த அளவிலேயே மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் மின் கட்டணம் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்து உள்ளது.
அப்போது முறையிட்டும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மின் மீட்டரை மாற்றித் தரக்கோரி முறையிட்டேன். ஆனால் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில்தான் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் அதிகமாக ரூ.26,850 மின் கட்டணம் வந்துள்ளது.
இவ்வளவு மின் கட்ட ணத்தை என்னால் செலுத்த இயலாது. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் எனது மகள்கள் படிக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே அதிக அளவிலான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது கூலி தொழிலாளி பழனியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.