அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை இல்லை
- மாலையில் 2 சப்பாத்தி ரூ.3-க்கு விற்கப்படுகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு வசதியாக இருந்தது.
- உணவகங்களை நடத்துவதால் ஆண்டுக்கு ரூ.120 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன. காலை உணவாக இட்லி ஒரு ரூபாய். பொங்கல் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதியம் சாம்பார், எலுமிச்சை, கறிவேப்பிலை சாதம் ரூ.5-க்கும், தயிர்சாதம் ரூ.3-க்கும் விற்கப்படுகிறது.
மாலையில் 2 சப்பாத்தி ரூ.3-க்கு விற்கப்படுகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு வசதியாக இருந்தது.
அதே நேரம் ஒரே விதமான உணவே தினமும் வழங்கப்படுவதால் மக்களிடையே வரவேற்பும் குறைந்துள்ளது. ஆனாலும் அம்மா உணவகங்களை நம்பி இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கிடையில் மாலை நேரம் எப்போது சென்றாலும் சப்பாத்தி இல்லை என்கிறார்கள். இதற்கு காரணம் சாலையோர கடைகளில் ஒரு சப்பாத்தி ரூ.3 என்ற அடிப்படையில் மொத்தமாக விற்றுவிடுவதாக கூறப்படுகிறது.
இந்த மாதிரி புகார்கள் தொடர்ந்து வந்ததால் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் இருந்து மாவு வழங்கப்படவில்லை.
இன்னும் ஒரு மாதம் வரை சப்பாத்தி மாவு வழங்கப்பட மாட்டாது என்கிறார்கள் அதிகாரிகள்.
இந்த உணவகங்களை நடத்துவதால் ஆண்டுக்கு ரூ.120 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் இதை முறையாக மேம்படுத்தி குறைந்த விலையில் உணவு கிடைத்தால் பல்லாயிரக் கணக்கானோருக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள்.