அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் மோதல்- எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் கைகலப்பு
- கள ஆய்வு கூட்டம் நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
- சில நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
நெல்லை:
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் அ.தி.மு.க. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு கூட்டம் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள ஆய்வு கூட்டம் நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு கள ஆய்வு கூட்டத்தை நடத்தினர். இதில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளான எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் பிரிவு, சிறுபான்மை நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவரணி, தகவல் தொழில்நுட்பப்பிரிவு மற்றும் பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பல்வேறு வியூகங்கள் குறித்து நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது ஒரு நிர்வாகி பேசும்பொது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் நெல்லை மாநகர தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்றதாகவும், வாக்காளர் சேர்த்தல், திருத்த முகாம் நடைபெறும்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் இடம் பெறவில்லை எனவும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பேசினார்.
இதனைக்கேட்ட மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவின் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். சில நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதனைப்பார்த்த எஸ்.பி. வேலுமணி, தகராறு செய்பவர்களுக்கும், கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை. தவறு செய்தவர்கள் குறித்து கட்சி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும். எனவே அனைவரும் அமைதியாக இருங்கள் என்று கூறினார்.
தொடர்ந்து முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பனும் நிர்வாகிகளை அமைதிப்படுத்தினார்.