தமிழ்நாடு

திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Published On 2024-11-22 07:20 GMT   |   Update On 2024-11-22 07:20 GMT
  • காப்புரிமை பதிவு வசதி மையம், நவீன பரிசோதனை மையம் போன்றவை நிறுவப்பட்டுள்ளன.
  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இளம் தலைமுறை பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்தி பயன்பெறலாம்.

தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக ரூ.18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இப்பெருங்குழும திட்டத்தின் முதல் பகுதியாக ரூ.18.18 கோடி மதிப்பீட்டில் ரூ.13.33 கோடி மானியத்துடன் வடிவமைப்பு மையம், மறு பொறியியல் பரிசோதனைக் கூடம், சேர்க்கை உற்பத்தி மையம், மேம்பட்ட பயிற்சி மையம், காப்புரிமை பதிவு வசதி மையம், நவீன பரிசோதனை மையம் போன்றவை நிறுவப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 14-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழிற்பேட்டை சங்கத்தினரால் இணைந்து உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கு ஊர்தி மூலம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பொது வசதிகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இளம் தலைமுறை பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்தி பயன்பெறலாம்.

Tags:    

Similar News